குண்டு வெடிப்பு பயங்கரவாதி நாகர்கோவிலில் 3 நாட்கள் முகாம்: போலி பெயரில் லாட்ஜில் தங்கியிருந்தது அம்பலம்


குண்டு வெடிப்பு பயங்கரவாதி நாகர்கோவிலில் 3 நாட்கள் முகாம்:  போலி பெயரில் லாட்ஜில் தங்கியிருந்தது அம்பலம்
x

மங்களூரு குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதி நாகர்கோவில் லாட்ஜில் போலி பெயரில் 3 நாட்கள் தங்கியிருந்தது மங்களூரு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மங்களூரு குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதி நாகர்கோவில் லாட்ஜில் போலி பெயரில் 3 நாட்கள் தங்கியிருந்தது மங்களூரு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

குக்கர் குண்டு வெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், ஆட்டோவில் பின் இருக்கையில் பயணம் செய்த ஷாரிக் என்பவரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக மங்களூரு போலீசார் விசாரணை நடத்திய போது ஷாரிக் பயங்கரவாதி என்பதும், நாச வேலையில் ஈடுபட வெடிகுண்டை எடுத்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே படுகாயம் அடைந்த பயங்கரவாதியான ஷாரிக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதைத் தொடர்ந்து அவரிடம் மங்களூரு போலீசார் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். மேலும், அவருடன் பேசியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. அப்போது பயங்கரவாதி ஷாரிக்குடன், நாகர்கோவில் கம்பளத்தில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியது தெரியவந்தது.

வாலிபரிடம் விசாரணை

இதனையடுத்து அந்த வாலிபரை குமரி மாவட்ட போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தவறுதலாக ஷாரிக்குடன் பேசியது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் விடுவித்தனர். இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஷாரிக் எங்கெல்லாம் சென்றார்? யார் யாருடன் பேசினார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது தமிழகத்தில் மதுரை, கோவை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு ஷாரிக்கு வந்தது தொியவந்தது. அதிலும் குக்கர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியான ஷாரிக் 3 நாட்கள் வரை நாகர்கோவிலில் தங்கி இருந்தது உளவுத்துறை விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்டு மாத இறுதியில் அவர் நாகர்கோவிலில் இருந்துள்ளார். ஆனால் எதற்காக தங்கி இருந்தார்? என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை. இங்கு தங்கியிருந்த போது யாரிடமும் அவர் செல்போன் மூலம் பேசினாரா? என்றும் தெரியவில்லை. பின்னர் இங்கிருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

மங்களூரு போலீசார் விசாரணை

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஷாரிக் வந்து சென்ற இடங்களுக்கு மங்களூரு தனிப்படை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்தார்கள். அந்த வகையில் கடைசியாக மங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன் குமார் தலைமையில் மொத்தம் 3 போலீசார் நேற்று நாகர்கோவில் வந்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தான் ஷாரிக் 3 நாட்கள் முகாமிட்டு இருந்துள்ளார். அந்த லாட்ஜூக்கு மங்களூரு போலீசார் சென்று அங்குள்ள பதிவேட்டை ஆய்வு செய்தனர். அப்போது பயங்கரவாதி ஷாரிக், பிரேம்ராஜ் என்ற போலி பெயரை பதிவு செய்து லாட்ஜில் தங்கி இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து லாட்ஜில் இருந்து ஷாரிக் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story