3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு


3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 25 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 22 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 75 சதவீதமாகவும், அதிகபட்சமாக 92 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் நார்ச்சத்து மிகுந்த தீவனங்களான வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி போன்றவகைள் பாலில் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். ஆனால் மழைக்காலங்களில் பசும் புற்கள் அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் கறவை மாடுகள் உலர் தீவனத்தை தவிர்த்து விட்டு, பசுந்தீவனத்தை அதிகமாக உட்கொள்ளும்.

ஈக்கள் தொல்லை

இவ்வாறான சூழ்நிலையில் கறவை மாடுகளின் பால் உற்பத்தி அதிகரித்த போதிலும், பாலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து பாலுக்கான விலை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே நார்சத்து குறைந்த இளந்தளிர் புற்களை இடும் போது சோளத்தட்டு அல்லது வைக்கோல் கலந்து வெட்டிப்போடுவது அவசியம். மழை காலங்களில் இயல்பாகவே அடர்தீவனம் அளிப்பதற்கு முன்பு நார் தீவனத்தை அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பொதுவாக மழை காலங்களில் இடை, இடையே வெயிலும் நிலவுவதால், ஈக்களின் பெருக்கத்திற்கு மிகவும் உகந்த சூழலாக இருக்கும். அதனால் ஈக்கள் பெருகி, கோழி மற்றும் கால்நடை பண்ணைகளில் வரும் மாதங்களில் அதிக தொல்லை கொடுக்கும். ஈக்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோழிப்பண்ணை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story