3 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி.


3 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி.
x
தினத்தந்தி 15 May 2023 12:45 AM IST (Updated: 15 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 3 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானலுக்கு நேற்று வருகை தந்தார். அவர் நட்சத்திர ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டார்.

திண்டுக்கல்

கவர்னர் வருகை

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கொடைக்கானலுக்கு வருகை தந்தார். இதற்காக அவர், சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோஹினூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தர் கலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் திலீப், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிறிதுநேரம் விருந்தினர் மாளிகையில் கவர்னர் ஓய்வு எடுத்தார்.

நட்சத்திர ஏரி

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு அப்சர்வேட்டரி சாலை வழியாக அப்பர் லேக்வியூ, பாம்பார்புரம் ஆகிய இடங்களுக்கு சென்றார். அங்கு நிலவிய சீதோஷ்ண சூழலை அனுபவித்து மகிழந்்தார்.

இதைத்தொடர்ந்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியை சுற்றி பார்வையிட்டார். பின்னர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்றார். இன்று (திங்கட்கிழமை) காலை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்கா, வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை கவர்னர் சுற்றி பார்க்கிறார்.

மாணவிகளுடன் கலந்துரையாடல்

அதன்பிறகு காலை 11 மணி அளவில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு அவர் செல்கிறார். அங்குள்ள அன்னை தெரசா உருவ சிலைக்கு கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அவர், அங்கு பல்கலைக்கழக மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் மாலையில் சுற்றுலா இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு, நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கார் மூலம் மீண்டும் புறப்பட்டு சாலை மார்க்கமாக வத்தலக்குண்டு வழியாக மதுரை செல்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு

கவர்னர் வருகையையொட்டி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஷ் டோங்கரே (தேனி) ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கவர்னர் வருகையையொட்டி கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மாலை 6.45 மணி அளவில் திடீரென்று அவர் சுற்றுலா இடங்களை பார்க்க சென்றதால் அனைத்து சாலைகளும், ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. நிர்வாகிகள்

முன்னதாக சென்னையில் இருந்து மதுரை வந்த கவர்னர், அங்கிருந்து நேற்று மதியம் 2 மணிக்கு கொடைரோடு பயணிகள் விடுதிக்கு வந்தார். அவரை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு மதிய உணவு சாப்பிட்டார்.

அப்போது திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தனபாலன் மற்றும் நிர்வாகிகள் பலர் கொடைரோடு பயணிகள் விடுதிக்கு வந்தனர். கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டனர். அதற்கு முன் அனுமதி இல்லாமல் அவரை சந்திக்க முடியாது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொடைரோட்டில் இருந்து மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு கார் மூலம் கொடைக்கானல் சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் சிலர் சாலையில் ஓரத்தில் நின்று கவர்னருக்கு வணக்கம் தெரிவித்தனர். காருக்குள் இருந்தபடி அவரும் வணக்கம் தெரிவித்தார்.

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு

முன்னதாக கொடைக்கானலுக்கு சென்ற தமிழக கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் காட்டுவதற்காக வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்தனர்.

அப்போது, கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டபடி கருப்பு பலூனை கையில் பிடித்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்களை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். வத்தலக்குண்டுவில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நேற்று காலை பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் அரசு பஸ்சில், திராவிடர் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் மருதமூர்த்தி தலைமையில் அந்த அமைப்பினர் 11 பேர் கொடைக்கானல் செல்ல முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் அய்யம்புள்ளி சோதனைச்சாவடியில், பஸ்சை மறித்து அதில் இருந்த திராவிடர் விடுதலை கட்சியை சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களினால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கொடைக்கானல் பெருமாள் மலை பிரிவு பகுதியில் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்றதாக திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த விஜயகுமார், வீரலட்சுமி, சிவா, சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.


Next Story