மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ராமேசுவரம்-மதுரை இடையே வாரம் 3 நாட்கள் சிறப்பு ரெயில்- இன்று முதல் இயக்கப்படுகிறது
ராமேசுவரம்-மதுரை இடையே வாரம் 3 நாட்கள் சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
ராமேசுவரம்-மதுரை இடையே வாரம் 3 நாட்கள் சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
சிறப்பு கட்டண ரெயில்
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் வாரம் மும்முறை ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06780) இன்று (திங்கட்கிழமை) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில், மேற்கண்ட நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து அதிகாலை 6.20 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. ரெயிலில், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கு வழக்கமான கட்டணத்தை விட, 1.3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரெயில், வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மதுரை கோட்ட மேலாளர் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி
ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையே வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடைேய ராமேசுவரத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் முதன்மை பராமரிப்பு ரெயில்கள் அனைத்தும் மதுரை ரெயில்பெட்டிகள் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரெயிலும், பராமரிப்பு பணிக்காக மதுரை கொண்டு வரப்படுகிறது. ஆனால், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வரை காலி ரெயிலாக இயக்குவதற்கு பதிலாக, பயணிகளுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில், சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இதன் மூலம் ரெயில்வேக்கு ஓரளவு கட்டணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ராமேசுவரத்தில் இருந்து தினமும் காலை 5.40 மணிக்கு மதுரைக்கு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் 6.20 மணிக்கு புறப்படுகிறது. எனவே, பயணிகளிடம் வரவேற்பை பெறுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த ரெயிலை முற்றிலும் பொதுப்பெட்டிகளுக்கான வழக்கமான கட்டணத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.