கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் பலி


தஞ்சை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

2 கார்கள் மோதல்

தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் ஒரு காரில் தஞ்சைக்கு வந்து விட்டு பின்னர் திருவோணம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இதைப்போல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர்.

தஞ்சை சுற்றுவட்ட சாலையில் நாஞ்சிக்கோட்டை அருகே ருக்மணி கார்டன் என்ற இடத்தில் இரு கார்களும் வந்த போது எதிர்பாராத விதமாக கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 காரின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கின. மேலும் காரில் வந்தவர்கள் அலறினர்.

பரிதாப சாவு

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கவுன்சிலர்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சேட்முகமது (வயது60), ஊரணிபுரம் காமராஜ் நகரை சேர்ந்த சஞ்சய்காந்தி (45) என்று தெரியவந்தது.

மேலும் காயமடைந்தவர்கள் ஒரத்தநாடு, புது விடுதி மேலத்தெருவை சேர்ந்த சுந்தர் (45), ஊரணிபுரத்தை சேர்ந்த ரமேஷ், ராஜா (42), மற்றொரு காரை ஓட்டி வந்த டிரைவர் மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரை சேர்ந்த கவுதமன் (36), கோவிந்தராஜ் மகன் செல்லபாண்டியன், மன்னார்குடி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் மணிகண்டன், மன்னார்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் வைத்தியநாதன் என தெரிய வந்தது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர் சிகிச்சை பலினின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

தி.மு.க. பிரமுகர்கள்

இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் உயிரிழந்த சேட்முகமது தி.மு.க. மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளராகவும், சஞ்சய்காந்தி தி.மு.க. ஊரணிபுரம் நகர செயலாளராகவும், சுந்தர் தி.மு.க. உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்தனர் .


Next Story