3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு:ஊட்டியில் உறைபனி சீசன் தொடங்கியது-கடும் குளிரால் பொதுமக்கள் அவதி


3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு:ஊட்டியில் உறைபனி சீசன் தொடங்கியது-கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:45 PM GMT)

ஊட்டியில் உறைபனி சீசன் தொடங்கிவிட்டது. நேற்று 3 டிகிரி செல்சியசுக்கு கீழே வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் உறைபனி சீசன் தொடங்கிவிட்டது. நேற்று 3 டிகிரி செல்சியசுக்கு கீழே வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

உறைபனி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீதோஷ்ன நிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. அந்த வரிசையைத் தொடர்ந்து தற்போது பனிக்காலமும் 20 நாட்கள் தாமதமாக தொடங்கி உள்ளது. கடந்த 15-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நீர் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊட்டியில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் உறைபனிபொழிவு தொடங்கி விட்டது. இதன்படி ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடக்கிறது. பச்சை புல்வெளி மீது வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் தோற்றம் அளிக்கிறது.

3 டிகிரி செல்சியஸ்

கடும் பனி காரணமாக காலையில் மைதானங்களில் பயிற்சி பெறும் மாணவ- மாணவிகள், செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதற்கு இடையே ஊட்டியில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்கின்றனர்.

இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊட்டியில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கினாலும் தற்போது தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் குறைந்தபட்சம் 7 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் நேற்று குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. எனவே அடுத்த ஒரு சில வாரங்களில் மைனஸ் டிகிரியை வெப்பநிலை எட்டலாம். அதே சமயத்தில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 63 சதவீதமாக இருந்தது என்றார்.


Next Story