3 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
3 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கபட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை அருகே உள்ள அலசந்தாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிமுக்கம்பட்டு காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு கோவில் சந்தா தாமதமாக தந்ததாக கூறி 16 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வேணு என்பவர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு குழாய் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட மோதலில் வேணுக்கும் அதே ஊர் பகுதி சேர்ந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அறிந்து அவரை நலம் விசாரிக்க சென்ற தினகரன், வேலு, ராஜா ஆகிய குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர். மேலும் இது தொடர்பாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு இந்த மூன்று குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.