குமரி, நெல்லையை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது
குமரி, நெல்லையை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலகிருஷ்ணன்புதூர்:
குமரி, நெல்லையை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் சைக்கிள்கள் மாயம்
சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளை கற்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெர்சி ஜேக்கப் (வயது 20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்திவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் தெங்கம்புதூர் அருகே பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த கண்ணன் (39) என்பவரது மோட்டார் சைக்கிளும் மாயமானது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
தனிப்படை அமைப்பு
அதன்பேரில் சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தார்.
மேலும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததை அடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
பணிக்கன்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆறுமுகம் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கண்காணிப்பு ேகமராவில் கண்ணன் என்பவரது மோட்டார் சைக்கிளை 3 பேர் தள்ளிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்ததை கண்டனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது . நெல்லை மாவட்டம் ஏர்வாடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (30), கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் இசக்கிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (19), களக்காடு சிதம்பரபுரம் புதுகுடியிருப்பு முத்துநகரை சேர்ந்த சதீஷ்(24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பிரபல கொள்ளையர்கள்
இதனை தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 3 மாவட்டங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், சுசீந்திரத்தில் 2, தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஒன்று, நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 4, மேலப்பாளையத்தில் ஒன்று உள்பட 11 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தில் 360 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 11 மோட்டார் சைக்கிள்கள், 360 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.