திருச்சி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது


திருச்சி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது
x

திருச்சி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்

திருச்சி


திருச்சி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

10-ம் வகுப்பு மாணவன்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலையில் அவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று இருந்தான்.

மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிந்தனர். அப்போது, மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கி எறிந்து விளையாடியபோது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை சக மாணவர்கள் 3 பேர் சேர்ந்து கைகளால் தாக்கினர். இதில் நிலைதடுமாறிய மவுலீஸ்வரன் மரத்தில் முட்டி கீழே விழுந்தான்.

அடித்துக்கொலை

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மவுலீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டதுடன், மவுலீஸ்வரனை அடித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து மாணவனின் தந்தை தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், 3 மாணவர்கள் மீது மவுலீஸ்வரனை அடித்து கொலை செய்ததாகவும், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியை வனிதா ஆகியோர் மீது பள்ளியில் மாணவர்களை கவனிக்காமல் பணியின்போது மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 மாணவர்கள் கைது

இந்தநிலையில் மாணவன் மவுலீஸ்வரனை அடித்துக் கொலை செய்த வழக்கில், சக மாணவர்கள் 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

பின்னர், 3 பேரும் சிறுவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சியில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

இதற்கிடையே பணியின்போது மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியை வனிதா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story