நகை பறித்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது


நகை பறித்த கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

திருவட்டார் அருகே உள்ள சாரூர் கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுனிதா (36). இவர்களுடைய மகள் ஏற்றக்கோடில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், மகன் 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

நேற்றுமுன்தினம் மாலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று குழந்தைகளை அழைத்து வர சுனிதா ஸ்கூட்டரில் புறப்பட்டார். மூவாற்று முகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், சுனிதாவை நெருங்கியபடி வாகனத்தை ஓட்டினர். இதனால் பயந்து போன சுனிதா ஸ்கூட்டரை நிறுத்தினார்.

அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களில் ஒருவர் திடீரென சுனிதா கழுத்தில் கிடந்த நகையை பறித்தார். ஆனால் அந்த நகையை விடாமல் அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் மற்ற 2 பேரும் அவரை கீழே தள்ளி நகையை பறித்தனர். இதில் சுனிதா காயமடைந்தார். மேலும் 7 பவுன் நகையுடன் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேரும் தப்பி விட்டனர்.

3 பேர் கைது

மேலும் இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், டேவிட்ராஜ் மற்றும் போலீசார் மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நின்று கண்காணித்த போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அங்கு போலீசாரை கண்டதும் அவர்கள் தப்ப முயன்றனர். ஆனால் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சுசீந்திரம் வழுக்கம்பாறை மணவிளையைச் சேர்ந்த சவுந்தர் மகன் விக்னேஷ் (20), குளச்சல் உடையார்விளை நாடாச்சிவிளை முத்துக்குமார் மகன் நிதீஷ் ராஜா (22), குளச்சல் செம்பொன்விளை ஓலக்கோடு குமாரதாஸ் மகன் பிரேம்தாஸ் (23) என்பதும், மூவாற்றுமுகத்தில் சுனிதாவை தாக்கி நகையை பறித்ததும் அம்பலமானது.

பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு நகையையும் மீட்டனர்.

முதன்முறையாக வழிப்பறி

மேலும் விக்னேஷ் திருடியது குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது தந்தை வீட்டிலேயே சொந்தமாக தவணை முறையில் பொருட்களை விற்று தொழில் செய்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்த நான் கூலி வேலை செய்தேன். பிறகு போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்க ஆரம்பித்தேன்.

என் மீது போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கும், கன்னியாகுமரியில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பிறகு மண்டைக்காடு கோவில் திருவிழாவின் போது பொம்மை வியாபாரம் செய்தேன்.

அப்போது நிதிஷ்ராஜா, பிரேம்தாஸ் ஆகியோருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் 2 பேரும் என்னை போல் கஞ்சா விற்றது தெரியவந்தது. பின்னர் 3 பேரும் சேர்ந்து பண தேவைக்காக திருடலாம் என முடிவு செய்தோம்.

அதன்படி மோட்டார் சைக்கிளில் சென்று சுனிதாவின் நகையை பறித்தோம். பின்னர் மீண்டும் வேறு யாரிடமாவது நகையை பறிக்கலாம் என கருதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். போலீஸ் விசாரணையில், முதன்முறையாக வழிப்பறியில் ஈடுபட்டோம் என தெரிவித்தோம்.

இவ்வாறு விக்னேஷ் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் வரவழைத்து பாராட்டினார்.


Next Story