குண்டர் சட்டத்தில் 3 கஞ்சா வியாபாரிகள் கைது


குண்டர் சட்டத்தில் 3 கஞ்சா வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் 3 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் இந்த ஆண்டு கைதானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் 3 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் இந்த ஆண்டு கைதானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகிறார்கள். கஞ்சா விற்றதாக மட்டும் கடந்த 2 மாதங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டா் சட்டத்தில் போலீசார் கைது செய்தும் வருகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 58 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் கஞ்சா வியாபாரிகள் ஆகும்.

ஒரே நாளில் 3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதாவது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த மணி என்ற மணிவாசகம் (வயது25), நாகர்கோவில் தெற்கு சூரங்குடியை சேர்ந்த அரவிந்த் என்ற அரவிந்த் பிரியன் (23), வடசேரி அறுகுவிளையை சேர்ந்த சிவக்குமார் என்ற பாபு (21) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்றதாக வடசேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவர்களில் சிவக்குமார் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் மணிவாசகம், அரவிந்த் பிரியன், சிவக்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற கலெக்டர் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

எண்ணிக்கை 61 ஆக உயர்வு

இதையடுத்து 3 பேரையும் நேற்று வடசேரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். இதன்மூலம் இந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைதானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.


Next Story