3 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றதால் பரபரப்பு
மன்வயல் அருகே கொட்டகைக்குள் புகுந்து 3 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
மன்வயல் அருகே கொட்டகைக்குள் புகுந்து 3 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுகளை கொன்றது
கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி மண் வயல் பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட அச்சன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்று விட்டு, அனைத்து ஆடுகளும் வீடு திரும்பியது.
இதனால் இரவில் கொட்டகைக்குள் அடைத்து வைத்தார். நேற்று காலை 4 மணிக்கு ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து வீட்டை விட்டு கருப்பையா குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து கொட்டகைக்குள் சென்று பார்த்த போது ஒரு ஆடு ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டனர். மேலும் 2 ஆடுகளை காணவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்தபோது சிறுத்தை கொட்டகைக்குள் புகுந்து 3 ஆடுகளை கடித்து கொன்றதும், 2 ஆடுகளை இழுத்து சென்றதும் தெரிய வந்தது.
வனத்துறையினர் கண்காணிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில், கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன், வனவர் செல்லதுரை மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கால்நடைகளை பாதுகாக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கருப்பையாவுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ேமலும் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் இரவு மற்றும் மாலை நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.