குளச்சலில் 3 விசைப்படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகள் திருட்டு போலீசார் விசாரணை
குளச்சலில் 3 விசைப்படகுகளில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சலில் 3 விசைப்படகுகளில் இருந்த ஜி.பி.எஸ். கருவிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜி.பி.எஸ். கருவிகள் திருட்டு
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வந்தது. இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின.
அதைத்தொடர்ந்து மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் குளச்சல் மீனவர்கள் வர்க்கீஸ் (வயது 67), விஜயன் (48), எட்வர்ட் (43) ஆகியோர் நேற்று காலையில் தங்கள் விசைப்படகுகளுக்கு வந்து பார்த்தனர். அப்போது விசைப்படகில் வைத்திருந்த ஜி.பி.எஸ். கருவி, எக்கோ சவுண்டு மற்றும் வயர்லெஸ் கருவிகள் திருட்டு போனது தெரிய வந்தது. நள்ளிரவில் படகில் இருந்த தொழிலாளர்கள் அசந்து தூங்கும்போது மர்ம நபர்கள் படகுக்குள் புகுந்து மேற்படி கருவிகளை திருடி சென்றது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இது குறித்து மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் துறைமுகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசைப்படகுகளில் எக்கோ, ஜி.பி.எஸ்.கருவிகள் திருட்டு போனது அப்பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.