குமரியில் 3½ மணி நேரம் தாமதமாக பஸ்கள் இயக்கம்

5 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு எதிரொலியால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக நேற்று அதிகாலையில் குமரியில் 3½ மணி நேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
நாகர்கோவில்:
5 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு எதிரொலியால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக நேற்று அதிகாலையில் குமரியில் 3½ மணி நேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
பா.ஜனதா-காங்கிரசார் மோதல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கடந்த 3-ந் தேதி அன்று இளைஞர் காங்கிரசார் நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பா.ஜ.க.வினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் தடியால் தாக்கியும், கற்களை வீசியும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக நாகர்கோவில் கோட்டார் போலீசார் காங்கிரஸ் கட்சியினர் 31 பேர் மீதும், பா.ஜனதா கட்சியினர் 22 பேர் மீதும் என மொத்தம் 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 3 பேரும், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் உள்பட 2 பேரும் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 பஸ்கள் மீது கல்வீச்சு
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 5 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. அதாவது தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற அரசு பஸ் புதுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மஆசாமிகள் பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதேபோல் மார்த்தாண்டத்தில் இருந்து குளச்சல் நோக்கி புறப்பட்ட அரசு பஸ் நட்டாலம் அருகே வந்த போது திடீரென பஸ்சின் பின்புற கண்ணாடி மீது கல்வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கொல்லங்கோடு அருகே சாத்தன்கோடு பகுதி வழியாக சென்ற அரசு பஸ்சின் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
படந்தாலுமூடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று களியக்காவிளை அருகில் உள்ள குழிவிளை பகுதியில் சென்றது. அப்போது மர்மஆசாமியால் கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
மார்த்தாண்டத்தில் இருந்து பொன்மனை நோக்கிச் சென்ற அரசு பஸ் பயணிகளை இறக்கி விட்டபிறகு திருவட்டார் டெப்போவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பொன்மனை அருகே மங்கலம் பகுதியில் சென்றபோது மர்ம நபர்களால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.
போலீசில் புகார்
இதுதொடர்பாக புதுக்கடை, களியக்காவிளை, திருவட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கிராமங்கள் மற்றும் பஸ்நிலையங்களில் நிறுத்தப்படும் பஸ்கள் அனைத்தையும் அங்கு நிறுத்தக்கூடாது என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி பஸ்களை டெப்போவுக்கு கொண்டு வந்து டிரைவர்கள் நிறுத்தினர்.
மேலும் சில பஸ்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தாமதமாக பஸ்கள் இயக்கம்
இந்த பதற்றத்தால் நேற்று காலையில் பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டன. வழக்கமாக அதிகாலை 2.30 மணியில் இருந்து வெளியூர்கள் மற்றும் தொலைதூர பஸ்கள் இயக்கப்படும். ஆனால் நேற்று அந்த பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. வழக்கமாக மாவட்டத்திற்குள் பஸ்கள் அதிகாலை 4 மணியில் இருந்து இயக்கப்படும். அந்த பஸ்களும் வழக்கமான நேரப்படி இயக்கப்படவில்லை. காலை 6 மணிக்கு பிறகு தான் போலீஸ் பாதுகாப்புடன் படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட்டன. வெளிமாவட்டங்களுக்கு சென்ற பஸ்கள் ஆரல்வாய்மொழி வரை போலீஸ் பாதுகாப்புடன் சென்றன. மேலும் பஸ் நிலையங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அவதி
தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டதால் ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் கால் கடுக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் நாகர்கோவில் வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அதிகாலையில் வெளி மாவட்டப் பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டு பஸ் நிலையங்களுக்கு வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர். இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.