மின்கசிவு காரணமாக 3 வீடுகள் எரிந்து நாசம்
தா.பழூர் அருகே மின்கசிவு காரணமாக 3 வீடுகள் எரிந்து நாசமானது. மேலும், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காலனி தெருவில் வசித்து வருபவர் கோபாலன் (வயது 60). இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று காலை 9 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் அருகில் இருந்த தனபால் (65), சுந்தரமூர்த்தி (37) ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அதனை அணைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதற்குள் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் கோபாலன் மனைவி கலைவாணி குடும்ப செலவுக்காக கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. மேலும் 3 வீடுகளிலும் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிவாரண உதவி தொகையினை வழங்கினார். அப்போது ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.