கொட்டாம்பட்டி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்து நகை, பணம் திருட்டு
கொட்டாம்பட்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நகை, பணம் திருட்டு
கொட்டாம்பட்டி அருகே உள்ள தேனங்குடிபட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவருடைய மனைவி ஜோதிகா (வயது 26). இவர் மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது இவர்கள் கருங்காலக்குடி கம்பூர் சாலையில் கிராம வங்கியின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ஜோதிகா வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். மீண்டும் நேற்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு இருந்தது அதில் இருந்த 14 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பாஸ்போர்ட் மற்றும் ரூ.30,000 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
அடுத்தடுத்த வீடுகள்
அதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் அக்கம்மாள் என்பவர் வீட்டை உடைத்து வீட்டிலிருந்த 50,000 ரூபாய், வெள்ளி பொருட்கள், சமையல் கியாஸ் சிலிண்டர் திருட்டு போனது. மேலும் பழனி என்பவர் வீட்டில் 3,500 ரூபாய், சிலிண்டர், வீட்டு உபயோக பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாராணி (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.