சாலை வசதியில்லாததால் நேர்ந்த துயரம்:நோயால் பாதித்த தந்தையை 3 கி.மீ. தூரம் தோளில் சுமந்த மகன்
சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த தந்தையை காப்பாற்ற 3 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் உரிய நேரத்துக்கு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்தார்.
குலசேகரம்:
சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த தந்தையை காப்பாற்ற 3 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் உரிய நேரத்துக்கு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சாலை வசதியில்லாததால்...
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாது. பாதிக்கப்பட்ட நபரை சில கி.மீ. தூரம் தூக்கிச் சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்ற பரிதாப நிலை இருக்கிறது.
தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்
இந்தநிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேச்சிப்பாறை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்த வேலு (வயது 67) என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.
இதையடுத்து அவருடைய மகன் விக்னேஷ், தந்தையை காப்பாற்ற தோளில் சுமந்து சென்றார். அந்த வகையில் 3 கி.மீ. தூரம் கடந்து சென்ற அவர் பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
காப்பாற்ற முடியாத துயரம்
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வேலு ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.
இதனை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த வேலுவை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சாலை வசதி அமைக்க கோரிக்கை
இதுகுறித்து மோதிரமலையைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் காணி என்பவர் கூறியதாவது:-
மோதிரமலை மலையில் இருந்து கும்பையாற்றைக் கடந்து செல்ல அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் மழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நிரந்தர பாலம் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டும் பாலம் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும் கோலிஞ்சிமடம் குடியிருப்புகளுக்கு செல்ல சாலை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற காரணத்தால் வேலுவின் உயிரை இழக்க நேரிட்டது. எனவே இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் இந்த பகுதி குடியிருப்புகளுக்கு செல்ல சாலை வசதி மற்றும் பாலம் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.