ரூ.3 லட்சம் செம்புக்கம்பிகள் திருட்டு


ரூ.3 லட்சம் செம்புக்கம்பிகள் திருட்டு
x

சேதுபாவாசத்திரம் அருகே புதிய மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செம்புக்கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் அருகே புதிய மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செம்புக்கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மின்மாற்றி

சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் காரங்குடா செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சுடுகாடு உள்ளது. இதன் அருகே விளைநிலங்கள், தென்னந்தோப்புகள் உள்ளன.இப்பகுதியில், விவசாயிகளின் மின்மோட்டார்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

செம்புக்கம்பி

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்மாற்றி உடைக்கப்பட்டு அதில் இருந்த செம்புக்கம்பி (காயல்) திருட்டுப்போனது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.இது குறித்து நாடியம் உதவி மின் பொறியாளர் சிவசங்கர் சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் மின்மாற்றியில் செம்புக்கம்பிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கழனிவாசல் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து செம்புக்கம்பிகள் திருட்டுப்போனது.இதைப்போல செங்கமங்கலம் பகுதியிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செம்புக்கம்பி திருட்டுப்போனது.தொடர்ச்சியாக தனியார் நிலங்களில் வைக்கப்பட்டிருந்த மோட்டார்களில் இருந்து செம்புக்கம்பி திருட்டுப்போன நிலையில், தற்போது அரசின் மின்வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றி உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான செம்புக்கம்பி திருட்டுப்போன சம்பவம் சேதுபாவாசத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story