தொழிலாளி வீட்டில் ரூ.3¾ லட்சம் நகை திருட்டு
தொழிலாளி வீட்டில் ரூ.3¾ லட்சம் நகையை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமம் சர்ச் தெருவைச்சேர்ந்தவர் ராமன் (வயது 57), கூலித் தொழிலாளி. இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 5 மணியளவில் ராமனின் மனைவி ஜெயா எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த கம்மல்கள், மூக்குத்தி, செயின், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மோதிரங்கள் என மொத்தம் 9¾ பவுன் நகைகளை திருடிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் ராமன் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கை ரேகை மற்றும் தடயவியல் நிபுணர் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.