நிலக்கோட்டை அருகே ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு
நிலக்கோட்டை அருகே ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் லட்சுமணனின் மகன்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன், நிலக்கோட்டை அருகே கல்லடிப்பட்டியை சேர்ந்த சந்தானம் ஆகிய 4 பேரும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் வேலை வாங்கி கொடுப்பதற்கு ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து லட்சுமணன், அவர்களிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்தார். பின்னர் அவர்கள் பணி நியமன ஆணைக்கான சான்றிதழை வழங்கினர். இதையடுத்து லட்சுமணன், தனது மகன்களுடன் சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்திற்கு சென்று, பணி நியமன ஆணைக்கான சான்றிதழை கொடுத்தனர். அப்போது அந்த சான்றிதழ்கள் போலியானவை என்பது ெதரியவந்தது. இதனால் மோசடி செய்யப்பட்டது குறித்து அறிந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்பட 4 பேரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜேந்திரன், ரகு, கோவிந்தன், சந்தானம் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.