ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடங்க 10 பேர் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி-கலெக்டர் தகவல்


ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடங்க 10 பேர் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2022 12:30 AM IST (Updated: 16 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க 10 பேர் கொண்ட குழு அமைத்து ரூ.3 லட்சம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.3 லட்சம் நிதி உதவி

தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினரில் தையல் தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு அமைத்து நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நாளில் குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும். குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுக்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் அமைத்துள்ள குழுக்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆவணங்கள்

குழுவில் உள்ள 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்து இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடையோர் இந்த திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து நிதி உதவி பெற்று பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story