வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.3½ லட்சம் பறிமுதல்


வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.3½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்


திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடாக வாங்கிய பணம் இருப்பதாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில், அதிகாரிகள் அருண் பிரசாத், சித்ரா, ஆரோக்கிய மேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நேற்று அதிரடியாக நுழைந்தனர்.

ரூ.3.50 லட்சம் பறிமுதல்

பின்னர் அலுவலகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற வாசல்களை மூடிவிட்டு, ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த பீரோக்கள் மற்றும் டேபிள்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் போது திடீரென மின்சாரம் தடைபட்டது. ஆனாலும் அதிகாரிகள் தங்கள் செல்போன் விளக்கு மூலம் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story