ரூ.3½ லட்சத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்
வெளிநாட்டில் வேலை என்ற முகநூல் விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ரூ.3½ லட்சத்தை இழந்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி மோசடி வாலிபரை கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.3½ லட்சம் மோசடி
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் வசித்து வருபவர் பூபதி (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டில் வேலை உள்ளதாகவும், எனவே தொடர்பு கொள்ளுமாறும் விளம்பரம் வந்துள்ளது.
இதனை உண்மை என நினைத்து பூபதி, விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் முனையில் பேசிய நபர் தன்னை பிரதீப் என்று அறிமுகம் செய்து வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி சிறிது, சிறிதாக ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்தை தனது போன்பே கணக்கு மூலம் பெற்றுள்ளார். ஆனால் பூபதிக்கு வேலை கிடைக்கவில்லை. தனது பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு பூபதி கூறியுள்ளார். பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
தனிப்படையினர் விசாரணை
செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டபோதும் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூபதி, திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி வழிகாட்டுதலின்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் சைபர் கிரைம் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவரின் போன்பே வங்கி கணக்கு விவரங்களை பெற்றனர்.
வாலிபர் கைது
விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் கணியாகுளத்தை சேர்ந்த பிரதீப் (வயது 27) என்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று பிரதீப்பை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்தை மீட்டனர். கைதான பிரதீப்பை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.