திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி

செம்பட்டு,ஆக.11-

சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

3 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வாகனங்களில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பாக முனையத்தில் நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் பொருட்கள் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

17-ந்தேதி வரை...

அதன்பின் ஸ்கேனர் உதவியுடன் மீண்டும் பொருட்கள் சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே பயணிகள் உடைமையுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சுதந்திர தினத்தன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நிகழச்சி நடக்கிறது. இதில் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், விமான நிறுவனத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story