விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் 3 அமைச்சர்கள் வழங்கினர்


விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் 3 அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை 3 அமைச்சர்கள் வழங்கினர்.

விழுப்புரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ஆகிய மண்டலங்களில் கடந்த ஆண்டு 2022 ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பேருக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு 278 பேருக்கு ரூ.71 கோடியே 55 லட்சம் மதிப்பிலான பணி கொடைக்கான காசோலையை வழங்கி பேசினர்.

ரூ.2,500 கோடி நிதிஉதவி

நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் போக்குவரத்து துறையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஓய்வு பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகையை எல்லாம் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். போக்குவரத்து துறைக்கு என்று கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.2500 கோடி நிதி உதவியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார் என்றார்.

பல்வேறு திட்டங்கள்

அமைச்சர் பொன்முடி பேசுகையில், தனியார் வசமிருந்த போக்குவரத்து துறையை அரசுடைமை ஆக்கி அரசு போக்குவரத்து துறையை ஏற்படுத்தியதே தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். அவரது நூற்றாண்டு விழாவை போக்குவரத்து ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். தற்போது பணி ஓய்வு பெற்றவர்கள் அனைவரும் கருணாநிதி காலத்தில் பணி அமர்த்தப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உடல் உழைப்பினை வழங்கும் தொழிலாளர்களின் நலனை காத்திடும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தினார். இன்றைக்கு அதே வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் நலனில் அக்கறை கொண்டு கட்டணமில்லா பேருந்து சேவையினை வழங்கி உள்ளார். மற்ற மாநிலங்களில் டீசல் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றார்.

குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை

இதைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் அர்ஜூனன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், துணைத்தலைவர் ஷீலா தேவி சேரன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சச்சிதானந்தம், கலைச்செல்வி, வாசன், இணை இயக்குனர் செல்வாம்பாள், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் எருமனந்தாங்கள் சேகர், அரசு போக்குவரத்து கழக நிர்வாக பணியாளர் சங்க பொது செயலாளர் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story