தாயை பராமரிக்காத மகனுக்கு 3 மாத சிறை தண்டனை:திருச்செந்தூர் உதவி கலெக்டர் உத்தரவு


தாயை பராமரிக்காத மகனுக்கு 3 மாத சிறை தண்டனை:திருச்செந்தூர் உதவி கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாயை பராமரிக்காத மகனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி மாலையம்மாள். இவர்களுடைய மகன் முத்துகுமார் (வயது 38). இந்த நிலையில் மாலையம்மாள் தன்னை மகன் முத்துகுமார் பராமரிக்கவில்லை என்று திருச்செந்தூர் உதவி கலெக்டரிடம் கடந்த 9.12.2021 அன்று மனு வழங்கினார்.

இதனை விசாரித்த உதவி கலெக்டர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007-ன் கீழ் முத்துகுமார் மாதந்தோறும் மாலையம்மாளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். ஆனாலும் இதுவரை மாலையம்மாளுக்கு முத்துகுமார் பணம் வழங்கவில்லை.

இதுகுறித்து மாலையம்மாள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கடந்த மாதம் 31-ந்தேதி புகார் மனு வழங்கினார். இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு இணங்க, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007-ன்படி தாயை பராமரிக்க தவறிய முத்துகுமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் உத்தரவிட்டார். தொடர்ந்து ஏரல் போலீசார் முத்துகுமாரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து உதவி கலெக்டர் குருச்சந்திரன் கூறுகையில், ''தாயை பராமரிக்க தவறிய முத்துகுமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது. பெற்றோரை பராமரிக்க தவறினால் கண்டிப்பாக தண்டனை உண்டு'' என்றார்.

----


Next Story