கஞ்சா போதையில் என்ஜினீயர்களை கடத்தி பணம் பறித்த மேலும் 3 பேர் கைது


கஞ்சா போதையில் என்ஜினீயர்களை கடத்தி   பணம் பறித்த மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 8:26 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் கஞ்சா போதையில் என்ஜினீயர்களை கடத்தி பணம் பறித்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் கஞ்சா போதையில் என்ஜினீயர்களை கடத்தி பணம் பறித்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 என்ஜினீயர்கள் கடத்தல்

அருமனை அருகே மஞ்சாலுமூடு நாரகத்தின்குழி பகுதியை சேர்ந்தவர் ஷாஜன். இவருடைய மகன் ஜிஸ்னு (வயது 26). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

புத்தாண்டையொட்டி இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். விடுமுறை முடிந்ததை தொடர்ந்து பெங்களூரு செல்வதற்காக கடந்த 3-ந் தேதி மார்த்தாண்டம் மார்க்கெட்டுக்கு பின்பகுதியில் நடந்து வந்தபோது அங்கிருந்த போதை ஆசாமிகள் 5 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர்கள் இல்லை என்றதும் இருவரையும் கடத்தி சென்று அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம், 2 செல்போன்களை பறித்தனர். மேலும் ஜிஸ்னுவின் தந்தைக்கு போன் மூலம் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை கூகுள் பே மூலம் பறித்தனர். அதன் பிறகு இருவரையும் அங்கேயே விட்டு விட்டு 5 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

வாலிபர் கைது

அதைத்தொடர்ந்து ஜிஸ்னுவும், சுர்ஜித்தும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேக் அப்துல் காதர் விசாரணை நடத்தி மார்த்தாண்டம் நந்தன்காடு பகுதியை சேர்ந்த ஜெனால்டு (27) என்பவரை கைது செய்தார்.

மேலும் 3 பேர் சிக்கினர்

மேலும் இந்த கடத்தலில் முக்கிய பங்கு வகித்தது சையத் (26) என்பது விசாரணையில் அம்பலமானது. அதைத்தொடர்ந்து சையத் உள்பட 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் மார்த்தாண்டம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் பதுங்கி இருந்த பாகோடு ஆலுவிளையை சேர்ந்த அஜின் மோன்ஸ் (23), மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்த சிபின்இம்மானுவேல் (22), பாகோடு ஊட்டிவிளையை சேர்ந்த அஸ்வின் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story