ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது


ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே ரவுடி கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரவுடி கொலை

ஆரல்வாய்மொழி அருகே அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). பிரபல ரவுடியான இவர் கடந்த 6-ந் தேதி அன்று இரவு லாயம் கைகாட்டியில் இருந்து சந்தைவிளை செல்லும் சாலையில் நின்ற போது ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது.

இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில் கனகமூலம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பிரவீன் (23), அவரது நண்பரான நாகர்கோவிலை சேர்ந்த ராமசித்தார்த் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், சூப் கடையில் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார், பிரவீனை கொன்று விடுவதாக மிரட்டியதால் அவரை கும்பல் தீர்த்துக் கட்டியது விசாரணையில் அம்பலமானது. மேலும் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாகர்கோவில் ராமன்புதுரை சேர்ந்த ஜெபின் (26) என்பவரை கைது செய்தனர். இவர் தீர்த்துக் கட்டிய கும்பல் தப்பி செல்வதற்கு உதவியுள்ளார்.

மேலும் 3 பேர் சிக்கினர்

பின்னர் நாகர்கோவிலை சேர்ந்த ஜோன்ஸ் (34), பூதப்பாண்டி அருகே கேசவன்புதூரை சேர்ந்த ஈசாக் என்ற சாம் (37), சீதப்பால் மேலத் தெருவை சேர்ந்த அரவிந்த் (30) ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். தக்கலை பஸ் நிலையம் அருகே தப்பி செல்ல முயன்ற போது அவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையில் புதிதாக பரபரப்பு தகவல் வெளியானது.

பரபரப்பு தகவல்

அதாவது கைது செய்யப்பட்ட ஈசாக் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் சந்தைவிளை பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் முன்பு வேலை பார்த்தவர் பிரவீன்.

ரவுடி ராஜ்குமாருக்கும், ஈசாக்கிற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் தான் பிரவீனுக்கும், ராஜ்குமாருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரவீனை கொன்று விடுவதாக ராஜ்குமார் மிரட்டியுள்ளார்.

இந்த விவரத்தை ஈசாக்கிடம் பிரவீன் கூறியுள்ளார். ஏற்கனவே ராஜ்குமார் மீது கோபத்தில் இருந்த ஈசாக்கிற்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே அவர் கும்பலுடன் சென்று ராஜ்குமாரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள், 3 கத்திகள், தப்பி செல்ல பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story