திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 அதிகாரிகள் பொறுப்பேற்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றனர்.
காலி பணியிடங்கள்
வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகம் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் முக்கிய பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக துணை கலெக்டர் பணியிடங்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட வழங்கல் அலுவலர், சமூக நல அலுவலர், கலால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் போன்ற பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக இருந்து வந்தது.
அதிகாரிகள் பற்றாக்குறையால் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதில் சிரமம் இருப்பது குறித்தும், இதனால் சக அதிகாரிகளுக்கு வேலைப்பழு அதிகரித்து அவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவது, அதிகாரிகள் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து தினத்தந்தியில் சில நாட்களுக்கு முன்பு விரிவாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
பொறுப்பேற்பு
இந்த செய்தியின் எதிரொலியாக மாவட்ட வழங்கல் அலுவலராக பாலசுப்பிரமணியன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக பெலிக்ஸ்ராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக ராஜராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும் காலியாக இருக்கும் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், அதன் எதிரொலியாக உடனடியாக 4 அதிகாரிகளை நியமித்த தமிழக அரசுக்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.