வீடுபுகுந்து நகை திருடிய 3 பேர் கைது
நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
நகைகள் மாயம்
நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை சிங்கம்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் பாபு, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உஷா தனது வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு உஷா குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, தங்க மோதிரம் என மொத்தம் 5½ பவுன் நகைகளை கழற்றி வீட்டின் அலமாரியில் வைத்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வில்சன் மகன் அனீஷ் (வயது20), அவரது நண்பர்கள் விபின் (27), வினீஸ் (23) ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போன்று உஷாவின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அலமாரியில் இருந்த நகைகளை நோட்டமிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் சம்பவத்தன்று உஷா அலமாரியில் இருந்த நகைகளை பார்த்த போது அவற்றை காணவில்லை. தொடர்ந்து வீடு முழுவதும் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை.
வாலிபரின் செருப்பு சிக்கியது
அதே நேரத்தில் வீட்டின் வெளியே ஒரு வாலிபரின் செருப்பு கிடந்தது. இதை கண்ட உஷா அந்த செருப்பு யாருடையது என அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அது அனீசின் செருப்பு என்பது தெரியவந்தது. இதனையடுத்து உஷா அனீசிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகமடைந்த உஷா அனீசை பிடித்து நித்திரவிளை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அனீசிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
உஷாவின் வீட்டு அலமாரியில் நகை இருப்பதை நோட்டமிட்ட அனீசும் அவரது நண்பர்களும் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டின் வெளிப்புற ஜன்னலை திறந்து அலமாரியில் இருந்த நகைகளை நைசாக திருடி சென்றுள்னர். பின்னர் அந்த நகைகளை புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்று ஜாலியாக செலவு செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.
கைது
இதையடுத்து அனீஷ் அவரது நண்பர்கள் விபின், வினீஸ் ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுக்கடையில் ஒரு கடையில் விற்கப்பட்ட 5½ பவுன் நகைகளை ேபாலீசார் மீட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் வேறு ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.