தொழிலாளியை வெட்டிய 3 பேர் கைது
தொழிலாளியை வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை அருகே கே.புதூரை சேர்ந்தவர் நாசர் (வயது 32). இவர் தற்போது மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக உள்ளார். இவருடைய உறவினர் உபேஸ்ரகுமான் (30). குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு நாசர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு, கே.புதூர்-நிலக்கோட்டை சாலையில் கோடாங்கிநாயக்கன்பட்டி பிரிவில் நாசர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த உபேஸ்ரகுமான், ரகிப்நிஸ்டர், சேக்பரீத், ரமீஷ்ராஜா, பாசித் ஆகியோர் நாசரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த உபேஸ்ரகுமான் மற்றும் அவருடைய நண்பர்கள் தாங்கள் கொண்டு வந்த வாளால் நாசரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்த நாசரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து நாசர் கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்குப்பதிவு செய்து சேக்பரீத், ரமீஷ்ராஜா, பாசித் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.