கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது
வருசநாடு அருகே கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வருசநாடு வன சரகத்திற்குட்பட்ட ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் கடமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக வருசநாடு வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனசரகர் கணேசன் தலைமையில் வனவர் தர்மன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல், கடமான் இறைச்சியை சமைத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் 3 பேரும் வனத்துறையினரை கண்டதும் தப்பிஓட முயன்றனர். இருப்பினும் அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் தேக்கம்பட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 40), பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆசைத்தம்பி (42), ஐந்தரைப்புலியை சேர்ந்த முருகன் (48) என்பதும், கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 கிலோ கடமான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கடமானை வேட்டையாடியதில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.