பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை நேரு நகரில் வசிக்கும் காந்தி-குமுதவள்ளி தம்பதியின் மகள் சுபாஷினி (வயது 22). பி.ஏ. பட்டதாரி. இவர் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் சுபாஷினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அய்யம்பேட்டை நேரு நகரை சேர்ந்த திருமாறன் மனைவி ராதாவின் மகள் மதுமிதாவும், சுபாஷினியும் தோழிகள். ராதாவின் வீட்டிற்கு அவரது தம்பி ராஜீ அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது சுபாஷினி, மதுமிதா, ராஜீ ஆகிய 3 பேரும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சுபாஷினியுடன் சேர்ந்து ராஜு போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோவை அவரிடம் காட்டி, நீ என்னோடு வந்து விடு. இல்லையேல் இந்த போட்டோவை எல்லோரிடமும் காட்டி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இந்த தகவல் ராஜுவின் அக்கா ராதாவுக்கு தெரிய வர அவரும் சுபாஷினியிடம் சென்று, என் தம்பி சம்பாதித்ததை எல்லாம் நீ தான் வாங்கி கொண்டாய். அதையெல்லாம் திருப்பி கொடு என்று மிரட்டியுள்ளார். அதேபோல ராஜீவின் மனைவி ஜெயகவுரியும் சுபாஷினியை மிரட்டியுள்ளார். 3 பேரின் மிரட்டலால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான சுபாஷினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதன்பேரில் சுபாஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜீ, ராதா, ஜெயகவுரி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
----