மான் இறைச்சி விற்ற 3 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே மான் இறைச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி வனச்சரகம் அம்புருவி அருகே காக்கா பொன்னூத்து பகுதியில் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ேராந்து சென்றனர். அப்போது பெரியகுளம் சோத்துப்பாறை அணை பகுதியில் பழைய பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே சிலர் மோட்டார்சைக்கிளில் வைத்து இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். பின்னர் அதிகாரிகள் விரட்டி சென்று 3 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடினர். பிடிபட்டதில் பாண்டி (வயது 29) என்பவர் மானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ததும், பெரியகுளம் தென்கரைப் பகுதியை சேர்ந்த ஹேமநாதன் (47), மாரநாடு (42) ஆகியோர் மான் இறைச்சியை வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, செல்போன்கள், 3 கிலோ மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
வனத்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40), கல்குத்துப்பாண்டி (38), பாண்டி ஆகியோர் தனியார் தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த கடமானை வேட்டையாடினர்.
பின்னர் இறைச்சியை துண்டு, துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பெரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.