1000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி கடத்தல்
அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின் பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணிகளை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்க கடத்திச்செல்லப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.
3 பேர் கைது
அப்போது, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் முன்பு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த கார் மற்றும் மொபட்டில் 3 பேர் இருந்தனர். கார் மற்றும் மொபட்டில் வெள்ளை மூட்டைகள் இருந்தன. போலீசார் அவற்றை சோதனை செய்த போது, அதில் தலா 50 கிலோ வீதம் 20 மூட்டைகளில் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தை சேர்ந்த கோவில்பிள்ளை (வயது 47), மண்ணச்சநல்லூரை சேர்ந்த விக்னேஷ் (28), முகமது ஆசிக் என்கிற கார்த்திக் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 1000 கிலோ ரேஷன் அரிசியையும், 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.