ஆழ்குழாய் கிணறுகளில் வயர் திருடிய 3 பேர் கைது


ஆழ்குழாய் கிணறுகளில் வயர் திருடிய 3 பேர் கைது
x

கீரமங்கலம் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளில் வயர்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரும்பு கடை வியாபாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

வயர்கள் திருடும் கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், சேந்தன்குடி, பெரியாளூர் உள்பட பல கிராமங்களில் பல மாதங்களாக இரவு நேரங்களில் விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார்கள் இயக்க பயன்படும் விலை உயர்ந்த வயர்களை மர்ம கும்பல் திருடிச் செல்வது வழக்கமாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 2 நாட்களில் 10 ஆழ்குழாய் கிணறுகளில் வயர்கள் திருட்டு போனது. நேற்று முன்தினம் இரவு வேம்பங்குடியை சேர்ந்த சிங்காரம் என்பவரின் தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சிலர் வயர்கள் அறுக்க முயன்ற போது அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்ததால் தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் ஒரு நபரை பொதுமக்கள் பிடித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

பொதுமக்கள் பிடித்து கொடுத்த நபரிடம் போலீசார் விசாரணை செய்த போது, சேந்தன்குடி கண்ணுச்சாமி மகன் செல்வகுமார் (வயது 43) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பிச்சென்ற அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனோஜ் (35), சிவசுப்பிரமணியன் மகன் தமிழ்குமார் (32) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஆழ்குழாய் கிணறுகளில் திருடும் வயர்களை கீரமங்கலத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.

திருட்டு வயர் வாங்கிய வியாபாரி

திருட்டு வயர்கள் வாங்கிய பழைய இரும்பு வியாபாரியையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வயர் திருடர்கள் சிக்கியுள்ள தகவல் அறிந்து ஏற்கனவே வயர் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுத்திருந்த விவசாயிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து தங்களுடைய வயர்களை மீட்டுத்தர கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வயர் திருடர்களையும், திருட்டு வயர்கள் வாங்கிய நபரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து வயர்களுக்கான தொகையை பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


Next Story