வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
x

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல்

தொழிலாளிகள்

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சிவமணி மகன் குமரேசன் (வயது 45). இவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (33). குமரேசன் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்த குமரேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் எருமப்பட்டி அருகே உள்ள திப்ரமகாதேவி புதூரை சேர்ந்தவர் சண்முகம் (59). கூலி வேலை செய்து வந்தார். இவர் திப்பர மகாதேவியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்துள்ளார். புது வீடு கட்ட கடன் ஏற்பட்டதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சண்முகம் மனவேதனையில் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

அரூர் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி (28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பள்ளிபாளையம் அடுத்த வெப்படையில் தங்கி நூல் மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே சிவசக்தி இறந்தார். இதுகுறித்து வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story