500 ரூபாய் தகராறில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு கத்தி வெட்டு
நாட்டறம்பள்ளி அருகே 500 ரூபாய் தகராறில் 2 பெண்கள்உள்பட 3 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர்கது செய்யப்பட்டனர்.
ரூ.500-க்கு தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் ஆகாஷ் (வயது 24). மேகநாதன் என்பவரின் மகன் அஜித். அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அருண்குமார் (24), டிரைவர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். ஆகாஷ், அஜித் ஆகிய இருவரும் அருண்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 1,500 ரூபாய் கடனாக கொடுத்துள்ளனர். அதில் 1,000 ரூபாயை அவர் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள 500 ரூபாயை அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை கேட்டுள்ளனர். அதற்கு மாலையில் தருவதாக கூறி அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆகாஷ், அஜித் மற்றும் நண்பர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் தனது செல்போனில் அருண்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் வீட்டில் இருந்துகொண்டே வெளியில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், அஜித் மற்றும் நண்பர்கள் 5-க்கும் மேற்பட்டவர்கள் அருண்குமார் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.
கத்தி வெட்டு
அப்போது ஆகாஷ் மற்றும் அஜித்துடன் வந்த 2 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருண்குமாரை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது மனைவி காவியா (21), தங்கை ஐஸ்வர்யா (16) ஆகியோருக்கும் கத்தி வெட்டு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அருண்குமார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது அவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் ஆம்புலன்சை சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்கியவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
2 பேர் கைது
மேலும் இதுகுறித்து காவியா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆகாஷ் மற்றும் அஜீத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.