சிறுவன் உள்பட 3 பேர் கைது
சேலத்தில் பட்டறையின் பூட்டை உடைத்து 9¾ கிலோ வெள்ளியை திருடிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளி திருட்டு
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் செவ்வாய்பேட்டை பங்களா தெருவில் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி காலை பட்டறையை திறப்பதற்காக வந்தார். அப்போது பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 9¾ கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இந்த திருட்டு தொடர்பாக விஜயன் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே விஜயனுக்கு போன் செய்த மர்ம ஆசாமி ஒருவன், திருடப்பட்ட வெள்ளி கட்டிகளை அரசு ஆஸ்பத்திரி முன்பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்தமிடம் அருகே வைத்துள்ளதாக தெரிவித்தான்.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் அங்கு சென்று 6 கிலோ வெள்ளியை மீட்டனர். மேலும் வெள்ளியை திருடிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வெள்ளியை திருடியது தாதகாப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 36), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சரவணன் (19) மற்றும் 18 வயதுடையை சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 3¾ கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.