கோவில் விழாவில் நகையை பறித்த சென்னை பெண் உள்பட 3 பேர் கைது


கோவில் விழாவில் நகையை பறித்த சென்னை பெண் உள்பட 3 பேர் கைது
x

புதுக்கடை அருகே கோவில் விழாவில் நகை பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே கோவில் விழாவில் நகை பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

கோவில் விழா

புதுக்கடை அருகே உள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், விழாவில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நகை பறிப்பு

விழா நடந்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அப்போதுதான் கூட்டத்தை பயன்படுத்தி யாரோ நகையை பறித்தது தெரியவந்தது.

அந்த பெண்ணின் சத்தம் கேட்டு, அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் சுதாரித்துக் கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்து புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.

3 பேர் கைது

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை கொளத்தூரை சேர்ந்த குமாரவேல்(வயது 48), அவரது மனைவி குமாரி(40), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பது தெரியவந்தது.

மேலும், வேறு சிலரும் இவர்களுடன் சேர்ந்து கோவில் விழாவுக்குள் புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்கள் சிக்கியவுடன் மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

தமிழகம் முழுவதும் கைவரிசை

மேலும், இந்த கும்பல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடைபெற்ற திருவிழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கைவரிசை காட்டியதாகவும், இவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கோவில் விழாவில் நகையை பறிகொடுத்த பைங்குளம் பகுதியை சேர்ந்த திரசம்மாள்(55) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து குமாரியை தக்கலை மகளிர் சிறையிலும், குமாரவேல், மணிகண்டனை நாகர்கோவில் கிளை சிறையிலும் அடைத்தனர். மேலும், இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story