காட்டுப்பன்றியை வேட்டையாடிய தம்பதி உள்பட 3 பேர் கைது


காட்டுப்பன்றியை வேட்டையாடிய தம்பதி உள்பட 3 பேர் கைது
x

கோத்தகிரியில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக தம்பதி உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக தம்பதி உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

20 கிலோ இறைச்சி

நீலகிரி வன கோட்டம் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி கிளப்ரோடு பகுதியில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது கிளப்ரோடு பகுதியை சேர்ந்த சகாயநாதன் (வயது 52) என்பவர் தனது வீட்டின் முன்பு நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதும், இறைச்சியை வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து வனத்துறையினர் அவரது வீட்டிற்குள் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் 20 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

இதுதொடர்பாக சகாயநாதன், அவரது மனைவி ஜாஸ்மின் மேரி, மகன் டான் பெர்னாண்டஸ் (25) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். அதன் பின்னர் அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் நாட்டு வெடி பயன்படுத்தி காட்டுப்பன்றியை வேட்டையாடி உள்ளனர். இதனால் அவர்களுக்கு நாட்டு வெடி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, 3 பேர் மீது கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் புகார் அளித்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story