வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவலம் பஸ் நிலையம் அருகே நர்சிங் மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவலம் பஸ் நிலையம் அருகே நர்சிங் மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மாணவிக்கு கத்திக்குத்து
திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது நர்சிங் மாணவியை காதலித்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சதீஷ்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி கடந்த மாதம் கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் திடீரென மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த மதன் (25), திலீப் என்ற பிரகாஷ் (24) ஆகியோர் கடந்த மாதம் திருட்டு வழக்கில் சத்துவாச்சாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரையின் பேரில் மதன், பிரகாஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதற்கான ஆணையின் நகல் வேலூர் ஜெயிலில் இருக்கும் 3 பேரிடமும் வழங்கப்பட்டது.