மின்னல் தாக்கி அண்ணன், தங்கை உள்பட 3 பேர் பலி


மின்னல் தாக்கி அண்ணன், தங்கை உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 14 Nov 2022 11:57 PM IST (Updated: 15 Nov 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் அண்ணன், தங்கை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

புதுக்கோட்டை

மின்னல் தாக்கியது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, திருப்புனவாசல் அருகே பறையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36). இவர் திருப்புனவாசலில் ஓட்டல் நடத்தி வந்தார். பின்னர் அதனை விற்று விட்டு தற்போது விவசாயம் செய்து வந்தார். இளையராஜாவின் அண்ணன் பழனிச்சாமி. இவர் கரூரில் ஒரு ஒட்டலில் வேலை பாா்த்து வருகிறார். பழனிச்சாமியின் மகன் சஞ்சய் (18), மகள் சஞ்சனா (16). திருப்புனவாசலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சஞ்சய் 12-ம் வகுப்பும், சஞ்சனா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதும், பின்னர் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதும் இளையராஜா தான். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்ததும் சஞ்சய், சஞ்சனாவை மோட்டார் சைக்கிளில் இளையராஜா அழைத்து கொண்டு வந்திருந்தார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. பறையத்தூர் கிராமத்தின் பக்கம் சிங்காரகோட்டை கோவில் அருகே சாலையில் வந்த போது திடீரென அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர்.

3 பேர் சாவு

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சாலையில் 3 பேரும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடல் அசைவு எதுவும் இல்லாமல் கிடந்ததால் அவர்களை உடனடியாக திருப்புனவாசலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு காரில் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது இளையராஜா, சஞ்சய், சஞ்சனா ஆகிய 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

சோகம்

பள்ளியில் இருந்து அண்ணன் மகன், மகளையும் வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த போது 3 பேரும் மின்னல் தாக்கி இறந்தது அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து திருப்புனவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் போது ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு இதுபோல விபத்து எதுவும் ஏற்பட்டதில்லை. திருப்புனவாசல் பகுதியில் மழையும் அதிகமாக பெய்யவில்லை. நேற்று மாலை லேசாக தூறல் மழை தான் பெய்தது. இதில் மின்னல் தாக்கி 3 பேர் இறந்தது பெரும் கவலையடைய செய்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.


Next Story