கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது


கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
x

யூடியூப் பார்த்து வீட்டில் துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

சேலம்

யூடியூப் பார்த்து வீட்டில் துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

துப்பாக்கிகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் கடந்த மே மாதம் 19-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் சன்னியாசிகுண்டு மணல்காரர் தெருவை சேர்ந்த நவீன் என்கிற நவீன் சக்கரவர்த்தி (வயது 25), செவ்வாய்பேட்டை ஜம்புலிங்கம் தெருவை சேர்ந்த சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், நவீன் சக்கரவர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டும், சஞ்சய் பிரகாஷ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரிந்தது. மேலும் அவர்கள் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதையடுத்து 2 பேரையும், ஓமலூர் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவி புரிந்ததாக கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 3 பேரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் பற்றிய புத்தகங்கள் இருந்ததால் இந்த வழக்கு சேலம் கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைதான நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம்

இந்தநிலையில், துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ், கபிலன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர். கபிலன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருப்பதால், அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். இதுதவிர, இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் வாங்குவதற்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story