முதியவர்கள் உள்பட 3 பேரை தாக்கி செல்போன்கள் பறிப்பு
வேலூரில் முதியவர்கள் உள்பட 3 பேரை தாக்கி மர்மநபர்கள் செல்போன்களை பறித்துச் சென்றனர்.
வேலூரில் முதியவர்கள் உள்பட 3 பேரை தாக்கி மர்மநபர்கள் செல்போன்களை பறித்துச் சென்றனர்.
செல்போன் பறிப்பு
வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 69). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தியேட்டர் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை கீழே தள்ளி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மணி (60). இவரும் கடந்த வாரம் ஆற்காடு சாலையில் தியேட்டர் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் திடீரென அவரை கீழே தள்ளி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29) என்பவர் கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரையும் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியே வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தனியாக செல்லும் முதியவர்கள் மற்றும் பாதசாரிகளை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆற்காடு சாலையில் உள்ள தியேட்டர் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இந்த மர்ம நபர்கள் 18, 19 வயதுடைய வாலிபர்கள். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.