சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து தந்தை, மகள் உள்பட 3 பேர் காயம்


கீழ்வேளூர் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரையில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து தந்தை, மகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரையில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து தந்தை, மகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சி தீபாம்பாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 53). இவர், திருக்கண்ணங்குடி ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று காலை ராஜேந்திரன், அவரது மகள் ராஜலட்சுமி(23), மூத்த மகளின் 3 வயது குழந்தை ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது.

3 பேர் காயம்

இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன், ராஜலட்சுமி, குழந்தை மீது சிமெண்டு காரைகள் விழுந்ததால் அவர்கள் காயம் அடைந்தனர்.

உடனே அக்கம், பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று ராஜேந்திரனும், 3 வயது குழந்தையும் வீடு திரும்பினர். ராஜலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சீரமைக்க கோரிக்கை

திருக்கண்ணங்குடி ஊராட்சி தீபாம்பாள்புரம் கிராமத்தில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட 27 தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது இந்த வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. சேதம் அடைந்த வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே மழைக்காலம் தொடங்க உள்ளதால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story