கணவர் உள்பட 3 பேருக்கு சிறை
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நத்தம் தாலுகா கொசவபட்டி பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 31). இவருடைய மனைவி விஜி (27). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது விஜியின் பெற்றோர் 30 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவருடைய பெற்றோர் துன்புறுத்துவதாக, வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விஜி புகார் கொடுத்தார். அதன்பேரில் நெல்சன், அவருடைய தந்தை அறிவழகன் (60), தாயார் சவரிஆரோக்கியசெல்வி (55) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சவுமியா மேத்யூ வழக்கை விசாரித்தார். மேலும் வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட நெல்சன், சவரி ஆரோக்கியசெல்வி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அறிவழகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.