குமரி மீனவர் உள்பட 3 பேர் விடுதலை
குமரி மீனவர் உள்பட 3 பேர் விடுதலை
கொல்லங்கோடு:
தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மரிய ஜெசின்தாஸ் என்ற மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அந்தமான் தீவில் இருந்து 8 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றார். அப்போது, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படையினர் கைது செய்தனர். கோர்ட்டு விசாரணைக்கு பிறகு அதில் 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மரிய ஜெசின்தாஸ் உள்பட 4 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, மரிய ஜெசின்தாஸ் சிறையில் இருந்தபடியே உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனையில் மரிய ஜெசின்தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்களாக இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து இந்தோனேசியா சிறையில் உள்ள 3 மீனவர்களான பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோமோன், சிஜின் ஸ்டீபன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மீனவர்களின் உறிவினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது இந்தோனேசியா சிறையில் இருக்கும் குமரி மீனவர் உள்பட 3 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் விரைவில் தாயகம் திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.