வெவ்வேறு விபத்துகளில் தாய்-மகள் உள்பட 3 பேர் படுகாயம்
வெவ்வேறு விபத்துகளில் தாய்-மகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி காந்திநகரை சேர்ந்தவர் யோகலெட்சுமி (வயது 29). இவர் சம்பவத்தன்று தனது தாய் காஞ்சனாவுடன் (59) திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோடு இந்திராநகர் பிரிவுரோடு எதிரே ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம், திடீரென அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் யோகலெட்சுமியும், காஞ்சனாவும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் 2 பேரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் லால்குடி அருகே அன்பில் ஜங்கம்மராஜபுரத்தை சேர்ந்தவர் அழகன்(55). விவசாயியான இவர் நத்தம் கிராமத்தில் உள்ள தனது வயலில் விவசாய பணிகளை பார்த்து விட்டு, மதியம் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். செங்கரையூர்-லால்குடி சாலையில் அரியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சமயபுரம் பள்ளிவிடையைச் சேர்ந்த கணபதி ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அழகன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து லால்குடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.