மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டிய மகன் உள்பட 3 பேர் கைது
சேலத்தில் மூதாட்டியை அடித்து வீட்டை விட்டு விரட்டிய மகன், மருமகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
80 வயது மூதாட்டி
சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 80). இவருடைய மகன் சங்கர் (53). இவருக்கு லட்சுமி (43) என்ற மனைவியும், சந்தோஷ் (29) மகனும் உள்ளனர். சுமித்ரா, சங்கர் செவ்வாய்பேட்டையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூதாட்டி சுமித்ராவை, அவருடைய மகன் சங்கர் அடித்து விரட்டி விட்டு, வீட்டை அபகரித்து கொண்டார். இதுகுறித்து சுமித்ரா சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.
3 பேர் கைது
இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த சங்கர், தனது தாய் வீட்டுக்கு குடுபத்துடன் சென்றார். பின்னர் அவர்கள் சுமித்ராவை தாக்கி, மீண்டும் வீட்டை அபகரித்து கொண்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த சுமித்ரா சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேலம் உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தினார். அதில் சங்கர், லட்சுமி, சந்தோஷ் ஆகியோர் சுமித்ராவை தாக்கி, வீட்டை அபகரித்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் முன்னிலையில் சுமித்ரா அவருடைய வீட்டில் குடியமர்த்தப்பட்டார். மேலும் அனைத்து மகளிர் போலீசார் சங்கர், லட்சுமி, சந்தோஷ் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.